சிங்கப்பூரில் குடிபோதையில் போலீஸ் அதிகாரியின் முகத்தில் துப்பிய தமிழர் கைது!

சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்ஸ்டோன் நகரில் வசித்து வருபவர் முருகேசன் ரகுபதி ராஜா (வயது 25). தமிழர். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்றார். மதுபோதையில் இருந்த முருகேசன் ரகுபதி ராஜா, அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு அளித்ததோடு மர இருக்கைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முருகேசன் ரகுபதி ராஜாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதோடு, அவரது இரு கன்னத்திலும் மாறி, மாறி அறைந்தார். இதையடுத்து போலீசார் மின்சார துப்பாக்கியால் சுட்டு, மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே, ஒருவரது முகத்தில் மிளகாய்பொடியை தூவி பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, போலீஸ் அதிகாரியை தாக்கியது உள்பட 10 குற்றச்சாட்டுகள் முருகேசன் ரகுபதி ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அடுத்த மாதம் 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் வழங்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!