குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள்

அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுகுறித்து தெரிவுக்கு உறுப்பினர்கள் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து, அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவுள்ளதுடன், தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயவுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹெமசிறி பெர்னான்டோ, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ் உள்ளிட்டவர்களிடம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்களைப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் அரச புலனாய்வு சேவையின் தலைவரான நிலந்த ஜயவீரவையும் சாட்சியமளிக்க தெரிவுக்குழு அழைக்க எதிர்பார்த்துள்ளது. ஆனால், சிறிலங்கா அதிபரின் உத்தரவை மீறி அவர் சாட்சியமளிக்க முன்வருவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு அரச அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு உள்ளது. தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க மறுக்கும் எந்த அதிகாரிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த விடயம் குறித்து, சபாநாயகரைச் சந்தித்த பின்னரே, முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியமளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத குழப்ப நிலையில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!