சர்வஜன வாக்கெடுப்பு நடத்த இடமளிக்கமாட்டோம்!- மகிந்த அமரவீர

பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர மறுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளதாலும், பாராளுமன்றச் செயற்பாடுகள் ஜனாதிபதியின் உத்தரவை மீறி நடைபெறுவதாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ஆலோசித்து, அதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆலோசித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் ஜனாதிபதிக்கு அவ்வாறான எந்தவொரு எண்ணமும் கிடையாது எனவும் மகிந்த அமரவீர கூறினார்.

“சர்வஜன வாக்கெடுப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானவை. அவ்வாறான அவசியமொன்று ஏற்படவில்லை. தேவையில்லாது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்கள் பணத்தை நாசமாக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஐ.தே.கவுக்கு இல்லை. ஆகவே, முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்த வாய்ப்புள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!