பொதுவாக்கெடுப்பு நடத்தும் சிறிலங்கா அதிபரின் திட்டத்துக்கு மகிந்த அணி, ஐதேக கடும் எதிர்ப்பு

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வகையில், பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

“கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக கலைப்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் இல்லை.

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மக்களின் ஆணையைக் கோருவது அர்த்தமற்றது. அரசாங்க நிதியை வீணடிக்கின்ற செயல்.” என்று தெரிவித்தார்.

பொதுவாக்கெடுப்பை நடத்தும் இந்த திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அதிபர் தம்முடன் கலந்துரையாடவில்லை என்றும், நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ யோசனை எதையும் அவர் முன்வைக்கவில்லை என்றும் ஐதேக தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான மக்கள் ஆணையைக் கோரும் பொதுவாக்கெடுப்பு நடத்தும் திட்டம் ஏதும் சிறிலங்கா அதிபரிடம் கிடையாது என்று சுதந்திரக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!