சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர் நேற்று சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சாட்சியமளிப்பதை தடுத்திருந்த அவர், ஏற்கனவே சாட்சியமளித்த தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மென்டிசையும், பணியில் இருந்து நீக்கினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று பிற்பகல் அமர்வை நடத்திய போது, அதன் அழைப்பின் பேரில், காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த கஸ்தூரிஆராச்சி மற்றும் முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெலகெதர ஆகியோர் முன்னிலையாகி சாட்சியம் அளித்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்த நிலையிலும், காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் சாட்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!