கல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வரும், உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி தலைமையில் போராட்டம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த 17ஆம் நாள், உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்து குருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நான்காவது நாள் – பெருகும் ஆதரவு
இன்று நான்காவது நாளாகவும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக பெருமளவு மக்களும், இந்து, கிறிஸ்தவ, பௌத்த மதகுருமாரும், போராட்டம் நடைபெறும் இடத்தில் குழுமியுள்ளனர்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் போராட்ட களத்தில் குவிந்திருந்தனர்.

1000 தீபங்களுடன் போராட்டம்
இந்தப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரியும் கல்முனையில் நேற்று மாலை 1000 மெழுகுவர்த்திகள் ஏந்தி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான தமிழ் மக்கள், மதகுருமார் பங்குபற்றினர்.

அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள்
இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரியும், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அருகிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இன்று முழு அடைப்பு
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிழக்கு மாகாணம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்த மாணவர் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

போட்டியாக போராட்டத்தில் குதிக்கும் முஸ்லிம்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என, சிறிலங்கா அரசாங்கத்தை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு, முஸ்லிம்களும் தீர்மானித்துள்ளனர்.

கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் இன்று காலை இந்த சத்தியாக்கிரக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!