பொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வரும் 24ஆம் நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, சிறிலங்காவுக்கு எதிர்வரும் 27ஆம் நாள் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், தவிர்க்க முடியாத திட்டமிடல் முரண்பாடுகளால், அவரால் சிறிலங்காவுக்கான பயணத்தை இம்முறை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று அறிவித்திருந்தது.

அமெரிக்காவுடனான படைகளை நிலைப்படுத்தல் தொடர்பான ‘சோபா’ உடன்பாட்டுக்கு, சிறிலங்கா எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளி்யிட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் பயணம் ரத்துச் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், “பொம்பியோவின் இந்தப் பயணத்தின் போது, ‘சோபா’ உடன்பாடு குறித்துப் பேசத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. அவரது சிறிலங்கா பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோசுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், இந்தப் பயணம், ஓகஸ்ட் மாதத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் இரவே தமக்கு தெரியவந்தது எனவும் அந்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!