ஈரான் மீது உடனடி தாக்குதலிற்கு உத்தரவிட்ட டிரம்ப்-பின்னர் நடந்தது என்ன?

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தாக்குதலிற்கான நடவடிக்கைகள் தயார்நிலையிலிருந்தன கப்பல்களும் விமானங்களும் தயார்நிலையிலிருந்தன என தெரிவித்துள்ள நியுயோர்க்டைம்ஸ் அவ்வேளையே தாக்குதல் திட்டத்தை கைவிடுமாறு உத்தரவு வந்தது என சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மக்களிற்கும் ஈரானிய இராணுவத்தினருக்கும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில் வெள்ளிக்கிழமை காலை ஈரானிய இலக்குகளை தாக்கும் விதத்தில் அமெரிக்கா தயாராகயிருந்தது எனவும் நியுயோர்க்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

படையதிகாரிகளும் இராஜதந்திர அதிகாரிகளும் தாக்குதலை எதிர்பார்த்திருந்தனர்,என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் ஈரானின் ராடார்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் சாதனங்களை தாக்குதவதற்கான அனுமதியை டிரம்ப் வழங்கியிருந்தார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் பின்னர் டிரம்ப் மனமாறியதற்கான காரணம் என்னவென தகவல்கள் வெளியாகவில்லை.

இதேNவைள இந்த தகவலிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

;அமெரிக்காவின் ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதை தொடர்ந்து இரு நாடுகளிற்கும் இடையிலான பதற்றநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.

ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

ஆர்கியு 4- குளோபல்ஹவ்க் ரக ஆளில்லா விமானத்தையே சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தவேளையே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் குறிப்பிட்டுள்ளது

தனது ஆளில்லா விமானமொன்று விழுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்கா எனினும் சர்வதேச வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!