ராஜிதவுக்கு எந்த அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு உப தலைவர் பதவி ? : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிறைவெற்று குழுவின் பிரதித்தலைவர் பதவியை சுகாதார ,சுதேச மருத்தவ அமைச்சர் ராஜித சேனாரத்ன சுய இலாபத்திற்காக தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எந்த அடிப்படையில் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டிருக்கின்றது.

இது தொடர்பில் மகஜரொன்றை கொழும்பிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி டாக்டர் ராசியா பென்ட்சேயிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர்.

அமைச்சர் சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட அந்த பதவி தொடர்பில் தங்களால் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு சாத்தியமான அளவு விரைவில் விளக்கத்தை தருமாறு வதிவிட பிரதிநிதியிடம் வேண்டுகோள்விடுத்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவரை சந்திப்பதற்கு தங்களது பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டிருக்கின்றனர்.

இந்த மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி செயலாளர், பிரதமரின் செயலாளர் , சுகாதார செயலாளர் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கையில் உள்ள துறைசார் நிபுணத்துவ கல்லூரிகளின் செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

மகஜரில் கிளப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடபிரதிநிதி உரிய பதிலை தர தவறினால் அது குறித்து ஜெனிவாவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்படும் என்று மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் அளுத்கே இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் காரியாலயத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!