கல்முனையில் நடந்தது என்ன?- மனோ கணேசன் விளக்கம்

தங்கள் மனதில் உள்ள ஒளிந்துள்ள என் மீதான குரோதங்களை வெளிப்படுத்த சில ஊடகங்கள் முயல்கின்றன. சில சமூக ஊடகர்களும் முயல்கிறார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியை தாங்கி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் கல்முனைக்கு நேற்று சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அனைவரையும் நோக்கி தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்முனையில் போராடும் தமிழ் மக்கள் ஆத்திரப்பட்டது உண்மை.ஆனால், அந்த ஆத்திரம் எனக்கு எதிரானது அல்ல. என்னை எவரும் தாக்கவும் இல்லை. தூற்றவும் இல்லை.

என்னுடன் வந்த நண்பர் சுமந்திரன் எம்.பி, நண்பர் தயா கமகே அமைச்சர் ஆகியோர் உண்ணாவிரத களத்திலிருந்து, வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் என் வாகனத்தில் ஏறி மக்களிடம் கையசைத்து விடை பெற்றே நான் வந்தேன்.இந்த உண்மை அங்கே அப்போது இருந்த எல்லா தமிழ் இளைஞர்களுக்கும் தெரியும்.” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!