இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றமை ஐஎஸ் தலைமைக்கு எவ்வாறு தெரியவந்தது?

ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம்பத்தில் அந்த அமைப்பிற்கு தெரியாது என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் உள்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஐஎஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்புகொண்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அந்த நபர் ,மூன்றாம் தரப்பொன்றின் மூலமாக, தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் தீவிரவாதிகளை ஐஎஸ் அங்கீகரிக்கவேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவி;த்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னரே ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியது,என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் இந்த தாமதம் வழமைக்கு மாறானது என ஐஎஸ் அமைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளுர் தீவிரவாதிகளிற்கு ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பிருந்ததா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இலங்கையின் விசாரணையாளர்களிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ஆனால் அவர்கள் ஐஎஸ் அமைப்புடன் எவ்வாறு தொடர்புகளை பேணிவந்தனர் என்பதற்கான பதில்கள் கிடைக்கவில்லை என விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் தொடர்புகளை பேணிவந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் வேறு சிலர் குறித்தும் எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் செயற்பட்ட விதம் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது ஜஹ்ரான் ஹாசிமின் சர்வாதிகார போக்கு குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர் தாக்குதலிற்காக சேர்த்துக்கொண்ட ஏனைய இளைஞர்கள் வெளிநாடுகளில் சென்று போரிட விரும்பினார்கள் ஆனால் ஜஹ்ரான் அதற்கு வாய்ப்பேயில்லை இலங்கையில் நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் புனிதமான செயல் என தெரிவித்தார்என்ற விடயம் தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜஹ்ரான் வேறு எவரினதும் சொல்லை கேட்கவில்லை தான் நினைத்ததையே செய்தார் போல தோன்றுகின்றது எனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!