26 படையினர் கொலை – 3 அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!

விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருந்த 26 அரச படையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள் நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் தலைமையில் ஆரம்பமாகின.

இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன் ஆகிய விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றச்சாட்டுக்களை திருத்துவதற்கு சட்டமா அதிபர் காலம் கேட்டிருந்தார். இதற்கு நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி விடுதலைப் புலிகளின் தடுப்பில் இருந்த 18 கடற்படை அதிகாரிகள், 08 இராணுவத்தினர் என, 26 சிறிலங்கா படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த புலிகளின் புலனாய்வு முகாமை கைவிடும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த போர்க்கைதிகள் கொலை தொடர்பான விசாரணைகளை, 2010ஆம் ஆண்டு தீவிரவாத விசாரணைப் பிரிவு ஆரம்பித்திருந்தது. நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!