தூக்கில் போட்டால் ஒத்துழைப்பது கடினம் – பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும்.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை சிறிலங்கா கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் கொள்கை விவகாரமாக பயன்படுத்துவதை பிரித்தானியா எதிர்க்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தடைக்கு ஆதரவாக சிறிலங்கா வாக்களித்தது.

இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.

இது சிறிலங்காவின் அனைத்துலக நிலை மற்றும் சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் காணப்படும் அதன் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும்.

சிறிலங்கா அரசாங்க உயர்ந்த மட்டங்களிடம் நாங்கள் எமது கவலைகளை எழுப்பியுள்ளோம்.

மரணதண்டனை தொடர்பான தடையை தொடர்ந்து பின்பற்றுமாறு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கிறோம், ”என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!