தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்கு எந்திரங்களை குறை சொல்வதா? – மோடி கடும் தாக்கு!

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 20-ந் தேதி உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதங்கள் நடந்தன. மக்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் பதில் அளித்து பேசியதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது. இந்த நிலையில், மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று அங்கு பேசினார்.

எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி

அப்போது தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்கு எந்திரங்களை குறைகூறுகிற எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:- இந்த சபையில் சில உறுப்பினர்கள் மின்னணு வாக்கு எந்திரங்கள் பற்றிய பிரச்சினையை எழுப்பி பேசுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். மக்களவையில் நாங்கள் இரண்டே இரண்டு உறுப்பினர்கள் இருந்த காலம் உண்டு. மக்கள் எங்களை கேலி செய்தனர்.

நாங்கள் தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். நாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்காக கடுமையாக உழைத்தோம். தேர்தல் முறை குறித்து நாங்கள் ஒருபோதும் கேள்வி கேட்டது இல்லை. தேர்தலில் தோற்றவர்கள்தான் மின்னணு வாக்கு எந்திரங்களை குறை கூறுகின்றனர். இது உங்கள் தொண்டர்களுக்குத்தான் மனச்சோர்வை ஏற்படுத்தும்.

ஏன் குறை கூறுகிறீர்கள்?

முன்பெல்லாம் தேர்தலுக்கு மறுநாள், எங்கெல்லாம் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்பது நாளிதழ்களில் முக்கிய செய்தியாக வந்த காலம் என்று ஒன்று உண்டு. இப்போது அதெல்லாம் இல்லை என்பதற்காக மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பது பற்றி இப்போது பேசுகிறோம்

மின்னணு வாக்கு எந்திரங்களை கொண்டு பல தேர்தல்கள் நடந்துள்ளன. மின்னணு வாக்கு எந்திரங்களை வைத்து தேர்தல் நடந்த பின்னர், இங்கே உள்ள பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களை ஆளுகிற வாய்ப்பினை பெற்றிருக்கின்றன. அப்படி இருக்கிறபோது, இப்போது தோல்விக்கு மின்னணு வாக்கு எந்திரங்களை பற்றி ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை இழந்ததால்தான், மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது குறை கூறுகிறீர்கள்.

பதில் சொல்ல வேண்டும்

மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து பேசுவதற்கு தேர்தல் கமிஷன் அழைத்தபோது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மட்டுமே வந்தன. இந்த விவகாரத்தில் அதிகம் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்றதற்காக பாராட்டுகிறேன். பிறகு ஏன் எஞ்சிய பிற கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்கள் பற்றி கேள்வி கேட்கின்றன? அவர்கள் தேர்தல் கமிஷன் அழைத்தும் போகவில்லை. அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சி நண்பர்களை கேட்கிறேன்; நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால், இந்தியா வெற்றி பெறவில்லை என்று கருதுகிறீர்களா? இந்தியாவும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றா? இல்லை. நாம் நமது தேர்தல் முறையை, ஜனநாயகத்தை மதிப்பது முக்கியம். இந்தியா வயநாட்டில் தோற்றதா? ரேபரேலியில் தோற்றதா?

தேர்தல் சீர்திருத்தம்

காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்களுக்கு எங்களது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் இதே அணுகுமுறையை பார்க்க முடிகிறது. ஆமாம். சிலருக்கு இதில் விருப்பம் இல்லாது இருக்கலாம். இல்லையென்றால் அவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் யோசனைகளை வந்து கூற வேண்டும். விவாதிக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான செயல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் சட்டம் இயற்றுவதை தடை செய்தவர்களை இந்த நாட்டின் மக்கள் தண்டித்து இருக்கிறார்கள். மக்களவையில் நிறைவேறுகிற மசோதாக்கள் மாநிலங்களவையில் முடங்கி விடுவதின் காரணத்தை மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவேறியது

பிரதமர் மோடியின் பதில் உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் ஓட்டின் மூலம் நிறைவேறியது. முன்னதாக இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ரங்கராஜனும், இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி. ராஜாவும் கொண்டு வந்த 2 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!