கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி!

கோவை கணபதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70). இவர் சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் லட்சுமி கார்டன் பகுதியில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 20 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த ராசப்பன் (38), அதே பகுதியை சேர்ந்த பொன்மாலை என்பவரின் மகன் வேடியப்பன் (29), பெருமாள் என்பவரின் மகன் மற்றொரு வேடியப்பன் (26) ஆகிய 3 தொழிலாளர்கள் சென்றனர்.

பின்னர் அந்த தொட்டிக்குள் முதலில் ராசப்பன் மட்டும் இறங்கி உள்ளார். தொட்டியின் ஆழம் தெரியாமல் இறங்கியதால் உள்ளே சென்றதும் அவருக்கு விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர் வெளியே வர முயன்று உள்ளார். ஆனால் முடியவில்லை. காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த 2 வேடியப்பன்களும், ராசப்பனை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினர்.

விஷவாயு தாக்கி 3 பேர் பலி

அப்போது அவர்கள் 2 பேரையும் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதில் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் விஷ வாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தவர்களை காணவில்லை என சுப்பிரமணியம் தொட்டிக்குள் எட்டிப்பார்த்துள்ளார். தொட்டிக்குள் 3 பேரும் பிணமாக கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கணபதி தீயணைப்பு நிலையம் மற்றும் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!