பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தவில்லை! – ஜெனரல் கொட்டேகொட

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்படக்கூடிய உடனடி தாக்குதல் அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டுள்ள போதிலும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இதுவரை தளர்த்திக் கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட உறுதிப்படுத்தியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்டிருந்த உடனடி தாக்குதல் அச்சுறுத்தல்கள் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்திக்கொண்டதாக கருதக்கூடாது. பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் உள்நாட்டு – வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் இணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது நாம் முகம்கொடுத்திருக்கும் பயங்கரவாதம் இதுவரை நாம் முகம்கொடுத்த பயங்கரவாதத்தை விட முற்றிலும் மாறுபட்டது. பாரம்பரிய பயங்கரவாதத்தை விட மாறுப்பட்ட இந்த புதிய பங்கரவாதம் சிறிலங்காவிற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனால் நாம் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் அவதானமாக இருக்கின்றோம்.

அதேவேளை நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு ஏழு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அதற்கமைய புதிய தேசிய புலனாய்வுத் தலைவரின் கீழ் அனைத்து புலனாய்வுக் கட்டமைப்புக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பயங்கரவாதத்தினால் எழக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலான புலனாய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

சிறிலங்காவில் வாழும் எந்தவொரு சமூகத்தையும் பிரித்தெடுத்து அவர்களை இலக்க வைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது , இனங்களுக்கிடையில் மோதல்களையும், வன்முறைகளையும் தூண்டும் நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கோ துணை போகும்.

இதனால் கடந்த காலங்களில் இடம்பெற்றது போல் எந்தவொரு இனத்திற்கு எதிரான இன வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதன் ஊடாகவும் நாட்டில் அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களையும் முழமையாக தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!