எமது எதிர்ப்பினாலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலர் வரவில்லை!- மார்தட்டும் மஹிந்த

சோபா உடன்படிக்கை மூலம் இலங்கையை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் செயலை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

‘அமெரிக்காவுடன் “எக்ஸா” உடன்படிக்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. எக்ஸா உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட விடயங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்ல “சோபா” உடன்படிக்கையை கைச்சாத்திடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இங்கு வருகை தந்ததும் சட்டத்துக்கு முரணான விடயங்கள் எதனையும் செய்தால் இந்த நாட்டில் வழக்குத் தாக்குல் செய்யவும், நீதிமன்றங்கள் அவர்களுக்கு எதிராகச் செயற்படவும் முடியாத வண்ணமே சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடப் பார்க்கின்றனர்.

இந்த உடன்டிபக்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ஐ.தே.க. அரசு விருப்பம் கொண்டுள்ளது. அதனால்தான் கடுமையாக எதிர்கின்றோம். ஜனாதிபதியிடம் இது குறித்து விளக்கமளித்துள்ளோம். அமெரிக்க இராஜாங்க செயலாளர் இங்கு வந்து சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிட்டிருந்தார். என்றாலும் எமது கடும் எதிர்ப்பின் காரணமாகவே அவர் தமது பயணத்தையும் இரத்துச் செய்துகொண்டார்.

எந்தவொரு நாட்டுக்கும் அடிமையாக இருக்கவும், மோதல்களை ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் விருப்பம் இல்லை. ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!