ராஜினாமா என்ற என்னுடைய முடிவில் தெளிவாக உள்ளேன் – ராகுல் காந்தி!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்றார்.

அசோக் கெலாட் வெளியிட்ட டுவிட் செய்தியில், “இப்போதைய சூழ்நிலையில் அவரால் [ராகுல் காந்தி] மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது,” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ தன்னுடைய முடிவில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக உள்ளார். தனது முடிவு குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இன்று மாலை புதுடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்கள். டெல்லியில் அவரை முதல்வர்கள் சந்திப்பதற்கு சற்று முன்னதாக ராகுல் காந்தியிடம் இருந்து இதுபோன்றதொரு பதில் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராகுலின் முடிவைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இன்று மாலை அவரை சந்திக்கவுள்ளனர்.

கட்சியில் ராகுல் காந்தியின் எதிர்கால பங்கு குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது. இதற்கிடையே கட்சியின் பல்வேறுமட்ட தலைவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாலை ராகுல் காந்தியுடனான சந்திப்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. ஆனால் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜனதா வென்றது. இங்கு அசோக் கெலாட்டின் மகன் வைபவ் ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு மட்டுமே அசோக் கெலாட் கவனம் செலுத்தியதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது. மே 25-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது ராஜினாமா கடிதம் வழங்கிய ராகுல் காந்தி, அசோக் கெலாட்டும், கமல்நாத்தும் அவர்களுடைய மகன்களை கட்சிக்கு மேலாக நினைத்தனர் என புலம்பினார். இப்போது காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்பதாக அசோக் கெலாட் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!