தெற்கில் தன்னை ஹீரோவாக காட்ட முனைகிறார் ஜனாதிபதி!- சிவிகே

தெற்கில் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்துவதற்காக, விடுதலைப் புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என்று பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப்பொருள் விற்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பில், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் இதனைத் தெரிவித்தார்.

‘ஜனாதிபதி குழப்பமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்தல், போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிப்பு என பல கருத்துகளை வெளியீட்டு வருகிறார். இவை அனைத்துக்கும் எதிர்ப்புகள் உள்ளன. இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக, புலிகள் மீது தவறுகளைக் காட்டி தன்னைக் ஹீரோவாக காட்ட முயற்சிக்கிறார். ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் ஒரு கூற்றை முன்வைப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒரு ஜனாதிபதி ஆதாரத்துடன் பேச வேண்டும். எழுந்தமானத்தில் இவ்வாறு சொல்வது தவறு.

விடுதலைப் புலிகள் முறைப்படி நிர்வாகத்தை நடாத்தி, வரி அறவீடுகளைச் செய்து நிர்வாகம் நடத்தினர்.புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். போதைப்பொருள் உட்பட புகைத்தல் மற்றும் மதுபான பழக்கமற்ற ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு விடுதலை இயக்கங்களுக்கும் இல்லாத ஒரு கட்டுப்பாடு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!