‘என் உயிருக்கு ஆபத்து’ – மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ள சிறிலங்கா அதிபர்

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க பலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறியவர்கள், இப்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்களைப் பாதுகாக்க முற்படுகின்றனர்.

போதைப்பொருளுக்கு எதிரான எனது பரப்புரையினால், அரசாங்க தரப்பு, எதிர்க்கட்சி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலர் என்னைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே அதிபராக தெரிவு செய்யப்பட்டேனே தவிர, தனிநபர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல.

ஊழல், மோசடி மற்றும் ஏனைய சமூக சீரழிவுகளில் ஈடுபடுவோரை தராதரம் பாராமல் தண்டிப்பேன்” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!