தேர்தலில் கட்டுப்பணத்தை இழப்பார் விக்கி! – சுமந்திரன்

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுப்பணத்தையும் இழக்கும் நிலையே ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வாறான கருத்தை வெளியிடவேயில்லை என அடியோடு மறுத்த சுமந்திரன், “உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆயினும், ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவுத்தளம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த நேரத்தில் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது இப்போது அதிகரித்திருக்கின்றது. தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும் அதில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுப்பணத்தையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!