ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால என்ற யோசனைக்கே இடம் கிடையாது – சேமசிங்க

பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சித்தால் பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை அன்றுடன் நிறைவு பெறும். பரந்துப்பட்ட கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரந்துப்பட்ட கூட்டணி விவகாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகளில் புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி என்று பெயரிட இரு தரப்பிலும் இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. இவ்விடயம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் பொதுஜன பெரமுனவுடன் இடம் பெறவில்லை .

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினரையும் ஒன்றுப்படுத்தி பலமான ஒரு அரசியல் பிரவேசத்தை கொண்டு செல்லவே அனைத்து கட்சிகளுனும் பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியொன்றும் விதிவிலக்கு அல்ல. எத்தரப்பினருடன் கூட்டணியமைத்தாலும் பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தினையும், கட்சியின் தலைமைத்துவத்தினையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஆரம்பித்ததிலிருந்து இவ்விடத்தினை குறிப்பிட்டே வருகின்றோம். இன்றும் இதில் உறுதியாகவே இருக்கின்றோம்.

பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் இதுவரையில் கொள்கை உருவாக்கம் தொடர்பிலே பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சித்தால் பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை அன்றுடன் நிறைவு பெறும். பரந்துப்பட்ட கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!