ரணிலின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் அமெரிக்கா

மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர், சீன் கெய்ன் குரொஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் செயலகம் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்சுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “மிலேனியம் சவால் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக, உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜூன் 24 ஆம் நாள் நான் பதவியேற்றேன், முக்கியமான நிறுவனம் மற்றும் திறமையான பணியாளர்களை வழிநடத்துவதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

சிறிலங்கா பொருளாதாரத்தில் பெரும் தடைகளை அகற்றுவதற்காக போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகம் தொடர்பாக, எங்கள் அரசாங்கங்கள் கூட்டாக உருவாக்கிய உத்தேச 480 மில்லியன் டொலர் நிதியுவி குறித்த உடன்பாட்டை முன்னேற்றுவதில் மிலேனியம் சவால் நிறுவனம் உறுதியாக உள்ளது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்ததுகிறேன்.

இந்த முக்கியமான கட்டத்தில், இந்த உடன்பாட்டை சரியான நேரத்தில் முன் கொண்டு செல்வதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

சிறிலங்கா மக்களுக்கு வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வறுமையை குறைத்தல் என்ற எங்கள் பகிரப்பட்ட இலக்கை முன்னெடுப்பதற்கான உங்கள் தொடர்ச்சியான தலைமையை நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!