இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும்!- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எமது பிள்ளைகளை இராணுவத்தினரிடமே ஒப்படைத்தோம். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்கவேண்டும் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சங்கத்தின் உறுப்பினரான ஆ. லீலாதேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘காணாமல் போன உறவுகள் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் எனவும் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான நகைச்சுவையை வேறு எந்த ஒரு நாட்டிலும் கேட்க முடியாது. இராணுவம் வேறு அரசாங்கம் வேறு என்று கூறக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் யுத்த காலத்தில் முன்னரங்கில் நின்றது அரசாங்கத்தின் இராணுவமே. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தது இராணுவத்திடமே.

இவ்வாறான நிலையில் இராணுவ அதிகாரி தங்களிடம் சரணடையவில்லை என கூறுவது கேலிக்குரியது மட்டுமல்ல இலங்கை மக்களை முட்டாளாக எண்ணி கூறிய கருத்தாகும். இவ்வாறான கருத்தை எமது மக்கள் பிரதிநிதிகளோ அல்லது எமக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களோ கேள்விக்குட்படுத்தவுமில்லை கண்டிக்கவுமில்லை.

நாம் இராணுவத்திடமே பிள்ளைகளை கையளித்தோம். எனவே இராணுவமே இதற்கு பதில் சொல்ல வேண்டும். அத்துடன் இந்த அரசாங்கமும் நாட்டுத்தலைவரும் எமக்கான பதிலை தரவேண்டும். அவர்கள் பதில் தராத பட்சத்திலேயே தற்போது நாம் சர்வதேசத்தின் உதவியை நாடி நீதியை கோருகின்றோம்.

ஆகவே சர்வதேசமும் இவ்வாறான விடயங்களில் கண்டும் காணாமல் இருப்பதை விடுத்து இதில் தலையிட்டு தீர்வினை வழங்க முன்வரவேண்டும். எமது போராட்டத்திற்கு உதவுவதாக பல அமைப்புக்களும் வேறு பலரும் கூறிக்கொண்டாலும் எமது போராட்டம் தனித்துவமானது எந்த கட்சியும் சாராதது.

நாமாக முடிவெடுத்து நாம் போராடிக் கொண்டிருகின்றோம். இறுதியாக ஒரு தாய் இருக்கும் வரை எமது போராட்டம் தொடரும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு செல்லும்வரை தொடரும்’ என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!