ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்?

சில குறிப்பிட்ட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால், மாகாண சபைத் தேர்தல்களை ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கு முன்னர் நடத்த முடியும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் ஊடக ஆசிரியர்கள் பேரவையின் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமா என்று உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கோருமாறு சிறிலங்கா அதிபரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றம் இன்னமும் அங்கீகரிக்காத நிலையில், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

எனவே, பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடையாக இல்லை என்று அவர் வாதிட்டார்.

இது தொடர்பாக தாம் விரைவில் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!