மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

இந்த அறிக்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவை முதன்மைப்படுத்துவதாகவும் ராஜபக்ச குடும்பமே, இந்த வருட இறுதியில் நாட்டின் உயர்பதவியை ஏற்க வல்லதாக இருக்கும் என்பது, அந்த அறிக்கையின் சாரம்சமாகும்,

ஆனால், முன்னர் என்றுமில்லாத அமெரிக்க உறவின் வளர்ச்சியை 2017இல் கண்டதாக குறிப்பிடுகின்ற அந்த அறிக்கை, ஜனநாயகத்தை தரமுயர்த்துவதற்கும், மனித உரிமையையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், இருநாடுகளும் சேர்ந்து உழைப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.

அதேவேளை பாதுகாப்பு விவகாரங்களில் திறந்த , சுதந்திரமான இந்தோ -பசுபிக் பிராந்தியம் என்ற பார்வையை அமெரிக்கா கொண்டுள்ளது.

சுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்திய மூலோபாயம் என்ற பெயரில் தேவைக்கு ஏற்ற வகையில் தனது படைகளை நகர்த்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் செய்து கொள்ளமுனைகிறது அமெரிக்கா.

சுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற சொல்லாடல் 2017 ஆம் ஆண்டு ஆசிய -பசுபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பினால், பிரயோகிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

தனது படைகளையும், கலன்களையும் சிறிலங்கா குடியகல்வு குடிவரவு திணைக்களம், சுங்க திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சிறிலங்கா அரசியல் எல்லைக்குள் தனியாகவோ, கூட்டாகவோ உட்பிரவேசிக்கவும் வெளியகலவும் வசதியாக இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.

பல்வேறு உட்பிரிவுகளை கொண்ட இந்த ஒப்பந்தம், ஏறத்தாழ அமெரிக்காவின் ஒரு மாநிலமாக சிறிலங்கா மாறுவது போன்ற எண்ணப்பாட்டை உருவாக்குவதாக, சில சிறிலங்கா ஆய்வாளர் தரப்பினால் பார்க்கப்படுகிறது .

ஆனால், இது சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் விரோதமான ஒரு ஒப்பந்தம் என்பது சிறிலங்காவின் பார்வையாக உள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்க சார்பாளராக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க கூட விரைவில் வர இருக்கும் தேர்தலில் சிங்கள பௌத்த மத தேசியவாதம் முக்கிய இடம்பிடிக்க இருப்பதால், அமெரிக்காவுக்காக விவாதிக்க முடியாத நிலையில் உள்ளார்.

இதனால் சிறிலங்காவில் இடம்பெறும் மத வன்முறைகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புருவாக்கத்தையும் கூட, எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக எதிர்த்து நிற்க முடியத நிலையில் உள்ளன. மத அரசியலே இந்த ஆண்டின் இறுதியில் வரும் தேர்தலில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது.

சிங்கள பௌத்தம் சார்ந்த பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் வெற்றி பெறப்போவது அதீத மதவாதமே என்ற தீர்மானமும் கண்டு விட்ட பின்பு, பல்லினத்தன்மை என்பது முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒரு தேசமாகவே சிறிலங்கா சென்று கொண்டு இருக்கிறது.

தமிழ் தேசிய இனம் நடத்திய போராட்டங்களை நசுக்க சிறிலங்காவுக்கு உதவிய சர்வதேசம், மேலும் தமது தேசிய நலன்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு பெரும்பாண்மை மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது,. சிறிலங்காவில் அரச கட்டமைப்பு என்ற பெயரில் மதவாத சிந்தனைகள் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. சட்டஅங்கீகாரம் பெற்று வருகிறது.

உலகில் மத அடிப்படையில் சட்ட அங்கீகாரம் பெற்ற மேற்கு நாடுகளின் ஆதரவுடன் உள்ள நாடுகளான சவூதி அரேபியா , இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் மிக சில வருடங்களில் நிறம் மாற்றப்படும் நிலையுள்ளது.

சிறிலங்காவிலும் முகவர் யுத்தம்
சர்வதேச அரங்கில் இன்றை காலகட்டம் முகவர் யுத்தம் அல்லது பதிலிகள் யுத்த காலகட்டமாக பல்வேறு ஆய்வாளர்களாலும் பார்க்கப்படுகிறது. அதாவது வல்லரசுகள் அவற்றின் செலவுகளை மட்டுபடுத்தும் வகையில், தமது பிரதிநிதிகள் ஊடாக தமது எதிரி நாட்டிற்கு சேதம் விளைவித்தல் என்பதுடன், நாடுகளை யுத்த நிலையில் ஈடுபட வைத்திருப்பதன் வாயிலாக அரசியல் இலாப நோக்கை எட்டும் போக்கு இந்த யுத்த முறையாகும் .

இந்த யுத்தத்தில் ஈடுபடக் கூடிய அலகுகள் பல்வேறு தேசிய இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்களாக நாடுகளுக்கு நாடு பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. இதில் ஒன்று தான் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு, மேற்கு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலிய, சவூதி அரசுகளிடமிருந்தும் முகவரி தவறாது எவ்வாறு ஆயுத தளபாடங்களும் நிதி உதவியும் பல்வேறு முகவர்களுடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ஈரானும், லெபனானில் இருந்து தொழிற்படும் ஹிஸ்புல்லா இயக்கம், தெற்கு யேமனில் போராடும் கவுட்டி படைகள் என பல்வேறு ஷியா இஸ்லாமிய குழுக்களை, சவூதி அரேபியா மீதும் இஸ்ரேலின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தி வருகிறது.

இதேபோல சிறிலங்காவிலும் இந்த முகவர் யுத்த ஏற்பாடுகள் அந்த நாட்டின் பூகோள அரசியல் தேவைகள் சார்ந்து பல்வேறு மேற்குலக, மத்திய கிழக்கு பிராந்திய, தெற்காசிய பிராந்திய வல்லரசுகளின் வழிநடத்தலில் ஒருசில அரசியல் இலாபம் பெறக்கூடிய அரசியல்வாதிகளின் இணக்கத்துடன் சிறிலங்காவில் தமக்கு சாதகமான அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கும்பொருட்டு நடைபெற்று வருகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே சீன அமெரிக்க போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பொருட்டு சிறிலங்கா வல்லரசுகளுடனான பேரம் பேசலில் ஈடுபட்டு இருந்தது. இதில் இரு வல்லரசுகளும் சிறிலங்காவில் ஆழ ஊடுருவி சமூக மட்டத்தில் ஆளுமை செலுத்தும் வரைக்கும் சென்றுள்ளன. பல அரசியல் தலைவர்களை தமது தேவைக்கு ஏற்ப மனம் மாற்றவும் முனைந்திருக்கின்றன.

இதில் சிங்கள பௌத்த பேரினவாத தூண்டுதலும் இஸ்லாமிய மதஅடிப்படைவாத சிந்தனைகளும், அதேவேளை முன்பு குறிப்பிட்டது போல ஒரே காலப்பகுதியில் இந்தியாவில் இந்து மதவாத எழுச்சியின் தேவையும் ஒருங்கே இணைவாக ஏற்பட்டதன் காரணமே, சிறிலங்காவில் இஸ்லாமிய மதவாதிகளை கருவிகளாக பயன்படுத்துவதன் தேவை சிறிலங்காவில் ஏற்பட்டு உள்ளது.

சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் மாற்றங்களை பொறுத்தவரையில் ராஜபக்ச குடும்பத்தின் மீள் வரவும், சர்வதேச அளவில் தற்போது எழுந்துள்ள தாராளவாதத்திலிருந்து, ஜனரஞ்சகவாத அரசியல் கோட்பாட்டு எழுச்சியும், கோத்தாபய ராஜபக்சவின் வரவும் தவிர்க்க முடியாது என்று அமெரிக்க உணர்ந்துள்ளது.

இதனை வெளிப்படுத்தும் வகைகளில் குண்டு வெடிப்பின் பின்பு மே மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட முன்னைநாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற ஈழ யுத்தத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச, யுத்தசூழலிற்கு ஏற்ப வல்லுனர் குழுவை அமைத்து முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் ஒரு வலுவான தேசிய தலைமைக்கு அழைப்பு விடுத்ததாக நினைவு கூர்ந்து புகழ்ந்துரைத்தார்.

அமெரிக்கா தற்பொழுது பெரும்பான்மை அரசியலின் பக்கம் சார்ந்து செயற்பட முயற்சிப்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் கடந்த யுத்த காலத்தின் போது சிறிலங்காவுக்கு நேரடி ஆயுத உதவி செய்ய முடியாது போனதை இட்டு றொபேட் ஒ பிளேக் கவலையும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

இந்த பேச்சுகளுக்கு இணங்கி பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் பதவிக்கு வரும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் சிறிலங்காவின் எதிர்காலத்தை மீண்டும் இரத்தக் களரிக்குள் செல்லாது தடுப்பார்களா என்பது தான் கேள்வி.

–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!