சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே, மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றும், கடலுக்கு அடியிலான இணைப்புகளின் மூலம் அதற்குச் சாத்தியம் இல்லை எனவும், தமிழ்நாட்டின் மின்சக்தி அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கடலுக்கடியிலான இணைப்புகளை அமைப்பது சாத்தியமில்லை என்று இந்த திட்டத்தின் தொழில்நுட்பக் குழு கருதுகிறது. ஏனென்றால் அதைச் செய்வதற்கு, இராமேஸ்வரத்தில் ஒரு கேபிள் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.

மேலும் கேபிள்களை கப்பல் வழியாக கடல்களுக்கு குறுக்கே கொண்டு செல்ல வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே, மேல்நிலை கேபிள்கள் மட்டுமே அமைக்கப்படும்.

இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு, கடலுக்கடியில் இணைப்பு கேபிள்களை அமைப்பது சாத்தியமில்லை என்று, இந்திய மத்திய அரசு அமைத்த தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.

இந்தக்குழு மேல்நிலை கேபிள்களை அமைக்க பரிந்துரைத்துள்ளது. குழுவின் இந்த அறிக்கையை சில நாட்களுக்கு முன்புதான் எமக்குக் கிடைத்தது.

அதைவிட, கடலுக்கடியில் கேபிள்களை அமைத்து, மின்சாரத்தை விநியோகிப்பதற்கான செலவு, கோபுரங்களை அமைத்து மேல்நிலை கேபிள்களை இடுவதற்கும் ஏற்படும் செலவை விட அதிகமாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் 2008 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதும், இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த திட்டம் தொடர்பாக Power Grid Corporation of India தயாரித்த ஆரம்ப கட்ட அறிக்கையில், கடல் படுக்கையில் கேபிள்களை இடுவதற்கு 2,292 கோடி ரூபா (இந்திய ரூபா) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 42 மாதங்களில் இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து சிறிலங்காவின் அனுராதபுரவுக்கு மின்சாரத்தை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

500 மெகாவாட் மின்சாரத்தை சிறிலங்காவும், இந்தியாவும் பரிமாறும் இந்த திட்டம் 2008இல் முன்வைக்கப்பட்டது. தற்போது, இந்தியாவும் பூட்டானும் இதுபோன்று மின்சாரத்தை பரிமாறுகின்றன. பூட்டானுக்கு இந்தியா மின்சாரத்தை வழங்குகிறது.

சிறிலங்காவுக்கு கேபிள்களை இடுவதற்கான சில தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திற்கு இப்போது ரூ .3,000 கோடி செலவாகும் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது என Power Grid Corporation அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Power Grid Corporation மற்றும் சிறிலங்கா மின்சார சபை இடையே தொடர் சந்திப்புகள் நடந்துள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Power Grid Corporation ஏற்கனவே ஒரு சாத்திய ஆய்வை நடத்தியது. கூட்டு வழிநடத்தல் குழு தற்போது இந்த திட்டத்தை மதிப்பீடு செய்து வருகிறது.

சாத்திய ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை கூட்டு வழிநடத்தல் குழுவுக்கு முன்வைப்பதற்கு ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!