ஜேர்மனியில் புலிகள் இயக்க உறுப்பினர் மீது பாயும் கதிர்காமர் கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு உதவினார் என, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனி காவல்துறையினர், வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலைக்கு உதவினார் என, கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனி காவல்துறையினரால், ஜி.நவநீதன் (40 வயது) என்ற முன்னாள் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிராக ஜேர்மனியின் தனியுரிமைச் சட்டங்களின் அடிப்படையில், ஸ்ரூட்கார்ட் நீதிமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி சமஷ்டி சட்டவாளர்கள் இன்று தெரிவித்தனர்.

வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தார் என்றும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்திருந்தார் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளார்.

இதன்போதே அவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கான தகவல்களை அளித்து உதவினார் என்றும், போரின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவினார் என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!