“கழிவுப்பொருள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வேண்டும்”

கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை கொண்டுவந்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு சபையில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை சுங்க திணைக்களத்தின் விசாரணையின் பிரகாரம் நாட்டுக்குள் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 2018 மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை 241 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

அவற்றில் 111 கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.அதன் இறக்குமதியாளரான ஈ.டி.எல். நிறுவனத்துக்கு அறவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் 103 கொள்கலன்களை ஹெலீஸ் நிறுவனம் துறைமுகத்தில் இருந்து விடுத்துக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி சுங்க திணைக்களத்தின் சீ.ஐ.சீ.டி. பிரிவுக்கு 65 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் பிரகாரம் அதனை பரிசீலிக்குமாறு பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கின்றார். பரிசோதனையில் குறித்த கொள்கலன்கள் கொண்டுவந்த நிறுவனங்கள் தெரியவந்ததுடன் மத்திய சுற்றாடல் அதிகார காரியாலயத்தின் அனுமதி இன்றியே கொண்டுவரப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த கொள்கலன்களை சோதனையிட துறைமுகத்துக்கு பணிப்பாளர் சென்று பார்த்தபோது, அதில் அதிகமானவை சோதிக்க முடியாதளவு துர்வாடை வீசும் அளவுக்கு புழுவந்திருக்கின்றது. இதில் பாவித்த மெத்தை, பறவைகளின் இறக்கை மற்றும் வைத்திய கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன. உடைந்த வீதுரு துண்டுகளும் இருக்கின்றன. அதனால் இது பாரிய தேச விரோத செயலாகவே காண்கின்றேன்.

எமது நாட்டு சட்டம் மற்றும் சுங்க சட்டம் என்பவற்றையும் மீறி இருக்கின்றது. இது தேசிய பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டதொன்றாகவே எண்ணத்தாதோகின்றது. 130 கொள்கலன்களில் 18 கொள்கலன்களை ஹெலீஸ் நிறுவனம் மீள் ஏற்றுமதி செய்திருக்கின்றது. அதில் 15 இந்தியாவுக்கும் 2 டுபாய்க்கும் 2017இல் மீள் ஏற்றுமதி செய்திருக்கின்றது. கொள்கலன்களில் இருந்த கழிவுப்பொருட்களின் மொத்த நிறை 29 இலட்சத்தி 64ஆயிரத்தி 850 கிலோவாகும். 2இலட்சத்தி 83ஆயிரத்தி 405 கிலோ மீள் ஏற்றுமதி செய்திருக்கின்றோம்.

இந்த கொள்கலன்களை கொண்டுவந்த நாட்டுக்கே மீள் ஏற்றுமதி செய்யவேண்டும் என சுங்க திணைக்களம் ஹெலீஸ் நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கின்றது. பிரத்தானியாவும் இதுதொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தெரியவருகின்றது.

அத்துடன் கழிவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொண்டுவந்வர்களுக்கு எதிராக சுங்க திணைக்கள சட்டத்தின் பிரகாரம் விசாரணை நடத்தி முறையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.ஆனால் தற்போது இருக்கும் சட்டத்தின் பிரகாரம் இவர்களுக்கு இதன் பெறுமதியைவிட 3மடங்கு தண்டப்பணம் அறவிடமுடியும். ஆனால் இது போதுமானதல்ல. தேசிய குற்றத்தை மேற்கொண்ட இவர்களுக்கு கிரிமில் குற்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியுமா என பார்க்குமாறு எமது சட்டத்தரணிகளுக்கு தெரிவித்திருக்கின்றேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!