ஜப்பான் இராணுவத்துடன் கைகோர்க்க விரும்பும் சிறிலங்கா

ஜப்பான், சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரடா நேற்று சிறிலங்கா அதிபரை அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில், சந்தித்தார். இதன்போதே, சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறினார்.

“கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவும் ஜப்பானும் அக்கறை கொண்டுள்ளன. அனைத்துலக கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, குறிப்பாக அனைத்துலக கடற்பரப்பின் பாதுகாப்புக்காக இரண்டு நாடுகளும், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் உள்ள நெருங்கிய ஒத்துழைப்பு இராணுவங்களுக்கு இடையிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

ஜப்பான்- சிறிலங்கா இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டு இதற்கு உதவியாக அமையும்.

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்பாடு, கொழும்பு துறைமுகத்தின் கையாளும் திறனை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முக்கியமான நகர்வாகும்.” என்றும் கூறினார்.

அத்துடன், சிறிலங்காவின் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக ஜப்பான் அளித்து வரும் உதவிகளுக்கும் சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!