ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தள, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

குருநாகலவில் நேற்று முன்தினம், நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது, சிறிலங்கா அதிபர் நாட்டில் இருக்கவில்லை. பிரதமர் கொழும்பில் இருக்கவில்லை.

தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும் எந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை ,கடந்த 24 ஆம் நாள், காலை 9.30 மணியளவில் அமெரிக்க பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவரும், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரும், தூதரகத்தில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கடற்படையினர் இந்த சந்திப்பிற்கு அனுமதி வழங்க மறுத்த போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் கூட அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

சுமார் 2 மணித்தியாலயங்கள் இந்த சந்திப்பு நீடித்திருந்த போதிலும் இதுவரையில் அது தொடர்பான தகவல்கள் யாருக்கும் தெரியாது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது அனைத்து விடயங்களிலும் அமெரிக்காவுக்கு ஏற்றாற் போல சிறிலங்கா முழுமையாக மாறியிருப்பது தெளிவாகிறது.

அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெயர் கூட குறிப்பிடப்படாத விமானமொன்று சிறிலங்கா வந்தது. இது தொடர்பிலும் யாரும் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவதன் மூலம் பயங்கரவாதம் மிக இலகுவாக சிறிலங்காவில் ஊடுருவதற்கு அரசாங்கம் தான் வழியமைத்துக் கொடுத்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!