மத்தியபிரதேசத்தில் கலப்பட பால் விற்று கோடீஸ்வரர்களான இரு சகோதரர்கள் கைது!

கலப்பட பால் விற்று கோடீஸ்வரர்களான மத்தியபிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட தக்புரா கிராமத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் தேவேந்திர குர்ஜார் மற்றும் ஜெய்வீர் குர்ஜார் ஆகியோர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சிறியதாக ஒரு பால் பண்ணை தொடங்கி, பின்னர் குறுகிய காலத்திலேயே 2 கோடி ரூபாய் மதிப்பில் பால் பதப்படுத்தும் இரு ஆலைகளை கட்டினர். மேலும் அவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்களும், காரும் இருந்ததால், அவர்களது குறுகிய கால வளர்ச்சி குறித்து பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில், சாம்பல் நகரில் உள்ள பால் பண்ணைகளில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு படை போலீசார், இரு சகோதரர்களின் ஆலைகளில் பாலில் கலப்படம் செய்வதற்கான யூரியா, பால் பவுடர், குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதேபோல் அவர்கள், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பால் பண்ணைகளுக்கும் கலப்பட பாலை விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு சகோதரர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், 65 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!