ஜனாதிபதித் தேர்தலில் கட்சிசாரா தேசிய வேட்பாளரையே களமிறக்குவோம் : தயாசிறி

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர் இல்லாமல் தேசிய வேட்பாளர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.

அவர் அரச நிதியில் ஊழல் மோடியில் ஈடுபடாதவராகவும், தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்காதவராகவும், சர்வதேசத்திடமிருந்து நாட்டை பாதுகாப்பவராகவும் இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்பதே சுதந்திர கட்சியின் நிலைப்பாடாகும்.

ஆனால் பொதுஜன பெரமுனவில் சிலர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அடுத்த பொதுத் தேர்தலில் எவ்வாறேனும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டிலான் பெரேரா போன்றோரே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருக்கின்ற போதிலும் பொதுஜன பெரமுன சார்பிலேயே செயற்படுகின்றார்.

சுதந்திர கட்சி உறுப்பினராக இருக்க விரும்பினால் அவர் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கலாம். அல்லது கட்சியிலிருந்து விலகி பொது ஜன பெரமுனவில் இணைந்து கொள்ளலாம். மாறாக கட்சியில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!