காணாமல்போகச் செய்யப்படவர்களின் விபரங்களை வெளியிடக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் அனைவர்களின் பெயர் விபரங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து இன்று ஒன்பது வருடங்களாகின்ற நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் விபரங்களை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

யூன் 2017 ம் ஆண்டு காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பு சபையை குறிப்பிட்ட பட்டியலை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வேன் என உறுதியளித்தார் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்த மே மாதத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த 100ற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமல்போயுள்ளனர் என உயிருடன் உள்ள அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஓரு குழுவினர் கத்தோலிக்க மதகுருவான பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்தனர் அவரும் பின்னர் காணாமல்போனார் என தகவல்கள் கிடைத்துள்ளன என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் சரணடைவதை நேரில் பார்த்த அவர்களின் குடும்பத்தவர்கள் அவர்களை படையினர் பேருந்துகளில் ஏற்றிச்செல்வதை கண்டதாக தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அவர்களிற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாத நிலையே நிலவுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2013 ம் ஆண்டு காணாமல்போனவர்களின் 13 குடும்;பத்தவர்கள் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் தங்கள் குடும்பத்தவர்கள் எங்கிருங்கின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை கண்டுபிடித்து உண்மையையும் உரிய பதிலையும் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!