கொழும்பில் பயணிகள் படகுச் சேவை!

கொழும்பில் இரண்டு வாரங்களுக்குள் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும் என, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதல் திட்டம் பேர ஆறு (Beire Lake) மற்றும் வெள்ளவத்தை கால்வாய் வழியாக ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரை பயணிக்க 40 நிமிடங்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சேவைக்காக வளிச் சீராக்கிகள் (AC) கொண்ட படகுகள் பயன்படுத்தப்படும் என, அமைச்சின் திட்டப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மட்டக்குளியிலிருந்து ஹங்வெல்ல பகுதிக்கு களனி ஆற்றின் ஊடாக படகுச் சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பயணிகள் படகு சேவைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களை இணைப்பதற்காக ஒருங்கிணைந்த கால அட்டவணைகள் தயாரிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா செலவாகும் என்பதோடு, இத்திட்டத்தின் மூலம் 500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!