கறுப்பின சந்தேக நபரின் கைகளை கட்டி வீதி வழியாக கொண்டு சென்ற காவல்துறையினர்- அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு

அமெரிக்காவின் டெக்சாஸில் கறுப்பினத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் கைகளை கட்டி வீதி வழியாக காவல்துறையினர் அழைத்து சென்ற சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து டெக்சாஸ் காவல்துறையின் தலைமை அதிகாரி இதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

டெக்சாசின் ஹவுஸ்டனில் உள்ள கல்வெஸ்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

டொனால்ட் நீலி என்ற சந்தேகநபரின் கைகளை பின்னால் சேர்த்து கட்டிஇரு அதிகாரிகள் அவரை வீதிவழியால் கொண்டு செல்வதையும் அந்த அதிகாரிகள் குதிரைகளில் காணப்படுவதையும் புகைப்படங்கள் காண்பித்துள்ளன.

குறிப்பிட்ட புகைப்படம் அமெரிக்காவில் அடிமைத்தனம் நிலவிய யுகத்தை நினைவுபடுத்துகின்றது என கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இது 2019 1819 இல்லை என பலர் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையின் தலைமை அதிகாரி இந்த அவமானப்படுத்தலிற்காக நீலியிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

டெக்சாசிலிருந்து ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பெட்டோ ஓ ருர்க்கே காவல்துறையினர் தங்கள் நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறவேண்டும் நீதி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது சகோதரர் ஒரு விலங்கினை போல நடத்தப்பட்டார் என டொனால்ட் நீலியின் சகோதரி தெரிவித்துள்ளதுடன் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் வசிப்பதற்கு வீடு கூட இல்லாதவர் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!