உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடுவிப்பு

Sri Lanka Media Attack
ரிவிர இதழின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் இருந்து, மேஜர் பிரபாத் புலத்வத்த உள்ளிட்ட 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரிவிர இதழின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கு கம்பகா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் திரிப்பொலி இரகசிய புலனாய்வு முகாமைச் சேர்ந்த மேஜர் பிரபாத் புலத்வத்த உள்ளிட்ட, 8 புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னிலையான குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் வழக்கில் மேஜர் புலத்வத்த உள்ளிட்ட 6 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இல்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர்.

போதிய ஆதாரங்கள் இல்லாமையால் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும், வொரன்ட் ஒவ்விசர் பிரேமானந்த உடலகம, லலித் ராஜபக்ச ஆகிய இரண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 317 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

அதேவேளை தற்போது பிணையில் உள்ள மேஜர் பிரபாத் புலத்வத்த உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதையடுத்து, மேஜர் பிரபாத் புலத்வத்த, பிரேமச்சந்திர பெரேரா, பிரபாத் துமிந்த வீரரத்ன, லசந்த விமலவீர, நிசாந்த ஜெயதிலக, நிசாந்த குமார ஆகிய புலனாய்வு அதிகாரிகளை வரும் 23ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!