தலைக்கவசம் போடவில்லையா? மதிய விருந்துடன் சுற்றுலா..! போலீஸ் புதிய அறிவிப்பு.

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை மதிய விருந்துடன் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் காவல்துறையினர். 100 ரூபாயை அபராதமாக செலுத்திவிட்டு ஹாயாக சென்று கொண்டிருந்த ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளுக்கு புதிய பாடத்தை கற்று கொடுக்க தர்மபுரி காவல்துறையினர் செய்த சிறப்பு ஏற்பாடு தான் இந்த காட்சிகள்..! ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்துடன் போலீஸ் வகனத்தில் ஏற்றப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளை, வரிசையாக நிற்க வைத்து மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதி மன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், 1 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை எல்லாம் சுற்றி காண்பித்தனர்.

இறுதியாக மோட்டார் வாகன நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு அவர்களுக்கு தலா 100 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த இன்ப சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்படும் என்று அறிவித்து பெரிய அறிவிப்பு ஒன்றையும் காவல்துறையினர் வைத்திருந்தனர்.

முதல் நாள் வாகன சோதனையில் சிக்கிய 50 க்கும் மேற்பட்ட இரு சக்கரவாகன ஓட்டிகளை ஒவ்வொரு நீதிமன்றமாக அழைத்துச்சென்று சுற்றி காட்டிய காவல்துறையினர், இவர்களை போல தலைகவசம் அணியாமல் பொறுப்பின்றி வாகனம் ஓட்டும் அனைவருக்கும் இந்த சுற்றுலா காத்திருக்கிறது என்று எச்சரித்தனர். ஆனால் அதில் ஒருவர் கூட கூச்சப்பட்டதாக தெரியவில்லை..! மகிழ்ச்சியுடன் சென்றனர்..!

ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருந்து அபராதம் செலுத்தும் போது அவர்களது காலமும். நேரமும் வீணாகும்..! எனவே அதனை உணர்ந்தாவது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர் காவல்துறையினர்.

ஆனால் மதிய விருந்து இலவசம் என்பதால் பல இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்து, உற்சாகமாக போலீஸ் வேணில் ஏறி சுற்றுலாவுக்கு புறப்பட்டு விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!