கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற ரெயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டியவர் கைது!

மும்பையின் விரார் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு திடீரென்று இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. தனது மனைவியின் நிலையைப் பார்த்த அந்த கணவர், அங்கிருந்து வெளியேறி உதவி கேட்கச் சென்றார். ஆட்டோ ஒன்று அருகில் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்தார். அந்த ஆட்டோ ஓட்டுனரும் பிளாட்பாரத்துக்கு உள்ளேயே வந்து கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டு அருகில் இருக்கும் சஞ்சீவனி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பெண்ணுக்கு, மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆட்டோவை பிளாட்பாரத்தில் ஓட்டியவர் சாகர் கம்லக்கர் கவாட். இவரை போலீசார் பின்னர் அடையாளம் கண்டறிந்தனர். அதன்பின்னர் ரெயில்வே போலீஸ் அவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி எச்சரிக்கை விடுத்த பின்னர் கவாட் விடுவிக்கப்பட்டார். இது குறித்து காவல்துறை அதிகாரி யாதவ் கூறுகையில், ‘கவாட் செய்தது நல்லது என்றாலும், ரெயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டுவதால் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!