மட்டக்களப்பு என்ன, சவுதி அரேபியாவா?

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு மதம் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு என்ன, சவுதி அரேபியாவா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் உடனடியாக அந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வெளிநாட்டிலிருந்து ஒரு தமிழ்மகன் நிதியைக் கொண்டு வந்திருந்தால் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டது என அவரைக் கைது செய்திருப்பார்கள். ஆனால் சட்டவிரோதமான முறையில் ஹிஸ்புல்லா அந்த நிதியைக் கொண்டு வந்திருக்கின்றார்.

3.6 பில்லியன் ரூபாய் நிதி இலங்கைக்கு பிழையான முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிக்கொள்கை முறைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இலங்கைக்கு வந்திருக்கிறது. ஆனால் இதனை அப்போதிருந்த அரசாங்கம் மறைத்தது. இப்போதுள்ள அரசாங்கமும் இதனை மறைக்கப் பார்க்கின்றதா என கேட்கின்றேன்.

இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்ற வேண்டும். மூவின மக்களும் வாழும் அந்த இடத்திலே ஒரு மதம் சார்ந்த அடையாளத்தோடு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அநேகமான பேரீச்சை மரங்களை அங்கே நாட்டியிருக்கிறார்கள். அது என்ன சவுதி அரேபியாவா? இவ்வாறு திட்டமிட்ட வகையிலே அந்த பல்கலைக் கழகத்தை ஹிஸ்புல்லா உருவாக்கியிருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!