நான் ஜம்மு – காஷ்மீர் மக்களுடன் இருக்கின்றேன் – மோடி அதிரடி உரை

JAPAN-INDIA/
ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வளவு வலுவானவர்கள், எவ்வளவு தைரியமானவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதை உலகிற்குக் காட்டி, புதிய இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர், புதிய லடாக்கை கட்டமைப்போம் என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காஷ்மீரில் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது. ஜம்மு – காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியே போதே இந்தியப் பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மேலும் உரையாற்றுகையில்,

காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது.

370, 35 ஏ இருந்ததால் காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தரவேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன.

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது.

காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

காஷ்மீர் ஊழியர்களுக்கு ஏனைய மாநிலத்தில் கிடைக்கும் சலுகைகள் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்.

3 மாதங்களுக்குள் ஜம்மு – காஷ்மீரில் நிர்வாகம் சீராகும் யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர்.

ஜம்மு – காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.

காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி முன்னெடுக்க முடியும்.

காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

தற்போது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏனைய மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும்.

ஜம்மு – காஷ்மீர், லடாக் மக்களுக்கு துணையாக 130 கோடி மக்களும் இருக்கிறார்கள். சிறிது சிறிதாக ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை திரும்பும். இராணுவம் மற்றும் காவல்துறையின் பணிகள் பாராட்டும்படியாக உள்ளது

இன்றைய சூழலை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொண்டு மாறி வருகிறார்கள். ஜம்மு – காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் எவரும் பறிக்கக் கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள், இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் ஜம்மு -காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். புதிய அரசு உருவாக விரும்புகிறோம், முதல்வர் வரட்டும். நீங்கள் மிகவும் நாணயமானவர்கள் என்பதை உறுதிபட கூறுகிறேன். வெளிப்படையான ஒரு சூழலில் உங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் ஏற்படும்.

பல ஆண்டுகளாக ஜம்மு – காஷ்மீரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உங்கள் சொந்தபந்தங்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும் ஆனால் அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்களிக்க முடியாது இருந்ததை நீங்கள் அறியும் போது அதிர்ச்சியடைவீர்கள். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள். அநீதி இப்படியே போய்க்கொண்டிருக்கலாமா?

புத்துயிர்பெற்ற புதிய சூழ்நிலையில் காஷ்மீர் மக்கள் இனி புத்துயிர் பெற்ற உத்வேகத்துடன் தங்கள் இலக்குகளை சாதிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பிறகு புதிய அமைப்பின் கீழ் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பணியாற்றும் போது அவர்களால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும். ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினை வாதச் சக்திகளிடமிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பல பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியினால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. இனி இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு பெற்று ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வார்கள். சகோதர, சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் மண்ணின் வளர்ச்சியை தாங்களே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஈத் முபாரக் பண்டிகை நெருங்குகிறது. உங்கள் அனைவருக்கும் என் ஈத் முபாரக் வாழ்த்துக்கள். ஜம்மு காஷ்மீரில் மக்கள் அமைதியாக ஈத் பண்டிகையைக் கொண்டாட அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். ஜம்மு காஷ்மீருக்கு வெளியே வசிப்பவர்கள் ஈத் பண்டிகைக்காக காஷ்மீர் திரும்ப விரும்புகிறார்கள், இவர்களுக்கும் அரசு உரிய உதவிகளைச் செய்யும்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள், பொலிஸார், மாநில அரசு ஊழியர்கள் நிலைமைகளை பாராட்டும் விதமாகக் கையாள்கிறார்கள். இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். இங்கு மட்டுமல்ல இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.

உலகின் இப்பகுதியில் அமைதியும் வளமும் கூடிவருமாயின் உலக அமைதிக்கான நம் முயற்சிகளும் வலுவடையும். ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதி மக்கள் எவ்வளவு வலுவானவர்கள், எவ்வளவு தைரியமானவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

நாம் அனைவரும் சேர்ந்து புதிய இந்தியாவுடன் புதிய ஜம்மு காஷ்மீர், புதிய லடாக்கை கட்டமைப்போம். என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!