குத்துக்கரணம் அடித்தார் கோத்தா

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் புளொட் தலைவர் சித்தார்த்தனை,கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது, தமிழ் மக்களின் ஆதரவு இன்றியே – சிங்கள மக்களின் ஆதரவுடன் தம்மால் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், தமிழ் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என தாம் கூறவில்லை எனவும், சித்தார்த்தனுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும் கோத்தாபய ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான த.சித்தார்த்தனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் வெளியாகின்றன.

அதனடிப்படையில், தமிழர்களின் ஆதரவு எனக்குத் தேவையில்லையென வெளியான செய்திகள் தவறானவை. அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் எமக்கு தேவை.

வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை எதிர்பார்க்கிறேன்.

எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு பலர் என்னுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு போலியான செய்திகள் வெளியாகின்றன.

எனினும், என் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை திசைமாற்றி விட முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!