தெரிவுக்குழு விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆஜராக வேண்டிய தினம் இவ்வாரமளவில் தீர்மானிப்போம் : பிரதி சபாநாயகர்

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தெரிவுக்குழுவின் முன்நிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பொன்றை அனுப்பிவைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எனினும் அவர் ஆஜராக வேண்டிய திகதி குறித்து தற்போதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாரத்தில் அதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதுவரையில் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலுள்ள பலரும் தெரிவுக்குழுவின் முன்நிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருக்கிறார்கள்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் தெரிவுக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தமையை அடுத்து, தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவுக்குழுவின் முன்நிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே தெரிவுக்குழு விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆஜராக வேண்டிய தினம் இவ்வாரமளவில் தீர்மானிப்போம் என அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!