இந்தியாவும், சீனாவும் சலுகை கேட்டால் என்ன செய்வது?

பாதுகாப்பு உடன்பாடு மூலம் அமெரிக்காவுக்கு கொடுக்கும் அதே சலுகையை இந்தியாவும் சீனாவும் கேட்டால் என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இந்த சலுகை கொடுத்தால் சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘அமெரிக்காவை எதிர்க்கும் எதிர்க்கட்சி அல்ல நாம். யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா எமக்கு பல உதவிகளை செய்துள்ளது. அதற்கான உடன்படிக்கைகளை செய்துள்ளோம். அதேபோல் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளையும் நாம் செய்துள்ளோம். அதில் தவறில்லை. ஆனால் இரகசியமாக செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் குறித்தே எமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றோம்.

வெளிப்படையாக நாம் கலந்துரையாடி இரு நாட்டுக்கும் ஏற்ற வகையில் உடன்படிக்கையை செய்துகொண்டால் அதற்கு எமது எதிர்ப்பில்லை. எந்த உடன்படிக்கை என்றாலும் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து ஆராய்ந்து ஜனநாயக ரீதியில் செய்து கொள்ள வேண்டும் என்றே கூறுகின்றோம். மேற்குலக நாடுகளின் யுத்த பூமியாக எமது நாட்டினை மாற்றுவதென்றால் அதற்கு இடம்கொடுப்பதா என்பதே எமது கேள்வி என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!