சஜித் – கோத்தாவை மோதலில் சிக்க வைக்கும் இணைய முடக்கிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள்.

சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் உள்ள, www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு தானாகவே கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அதுபோல, கோத்தாபய ராஜபக்சவுக்காக பரப்புரைகள் செய்யப்படும், gotabayarajapakse.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.prisons.gov.lk இற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இணையத்தள முடக்கிகளில் இந்த சதி வேலை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், www.sajithpremadasa.com என்ற இணயத்தளம் தங்களால், இயக்கப்படவில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தளத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, என்ன நடந்தது என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இருப்பினும், நாங்கள் விரைவில் ஒரு புதிய அதிகாரப்பூர்வ தளத்தை தொடங்கவுள்ளோம், என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் விபரக்குறிப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்துவதால் இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க ஆராயப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

எனினும், கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் உள்ள இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறைச்சாலைத் திணைக்களத்தின் வலைத்தளத்துக்குள் அனுப்பப்படுவது குறித்து கோத்தாபய ராஜபக்ச தரப்பின் கருத்து உடனடியாக வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!