ஐ.தே.க.வின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்து தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் – விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சி பிரேரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடையச் செய்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மயிலிட்டித்துறை முகத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் ஆட்சியிலிருந்த அரசாங்கம் வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்த ஆலயங்கள் பாடசாலைகள் மக்களின் வீடுகள் கட்டடங்களை இடித்தழித்து தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்கள். ஆட்சியில் இருந்த அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு இத்தகைய பாதக செயல்களை செய்துள்ளார்கள்.

இந்த மயிலிட்டி துறைமுகமானது நீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதாகும் இங்கிருந்து பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற வரலாறு பெற்ற இடம்தான் இந்த மயிலிட்டியாகும். முப்பது வருடங்களாக இந்த இடம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த நாங்கள் இன்று இந்தத் துறைமுகமானது புனரமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியைத் தந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட மக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்தவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்டவர்கள் இருக்கின்ற நிலையில் இதுமட்டுமன்றி வீடுகளை இழந்து உறவுகளை இழந்து வீதிகளில் நின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் அந்த நிலையை சற்றுமாற்றியமைத்திருக்கின்றது.

வரவு – செலவுத் திட்டத்தில் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு அபிவிருத்திகளைச் செய்துள்ளது. அது மட்டுமன்றி வலிகாமம் வடக்கில் பல்லாயிரக்கணக்கான காணிகளை விடுவித்து வீட்டுத் திட்டங்களை வழங்கியுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கின்ற காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் காரணம் அவர்களுக்கும் எமது நன்றிகள் தற்போதைய சூழலில் மக்கள் சரி ஊடகங்கள் சரி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள். வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கான தீர்வுத் திட்டத்தை தரவேண்டும் இதுதான் முக்கியமான விடையம் கடந்த காலத்தில் பல தடவைகள் ஆட்சிக்கு வந்து சென்றுள்ளார்கள் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஆகியோர் இரு தடவைகள் பாவிக்கு வந்திருந்த நிலையில் ஏமாற்றம் தான் கிடைத்தது.

இம்முறை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார் அவர் வந்தும் ஒக்டோபர் 26 ஆம் திகதி எங்கள் எல்லோரையும் நடுவீதியில் கொண்டுவந்து விட்டார் இனிவரும் காலத்திலும் இத்தகைய ஜனாதிபதிகளை நாங்கள் தெரிவு செய்யாது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரு தலைவரை தெரிவுசெய்யவேண்டும்.

தற்போது ஒரு பெரும்பான்மைக் கட்சி ஒரு தலைவரை இனம் காட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் அடுத்த வாரத்தில் தனது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவுள்ளது. 30 வருடகாலமாக இருந்த பிரச்சினையை ஐந்து வருடத்தில் முடிவுக்கு கொண்டுவரமுடியாது எனவே அடுத்த ஐந்து வருடத்திற்கு ஐக்கியதேசியக் கட்சியை ஆட்சிக்கு அமர்த்தி எமக்கான தீர்வுத் திட்டத்தை அடைய எமக்கு வாக்களிகக்கவேண்டும். என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!