பொய்யான வாக்குறுதிகளினால் ஐ.தே.க. இனியொரு போதும் ஆட்சிக்கு வர முடியாது

பொய்யான வாக்குறுதிகளினால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இனியொரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. அரசியல் ரீதியான தீர்மானத்தை நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது உள்ள பல ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பல வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். போலியான வாக்குறுதிகளினால் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமமைக்க முடியாது. 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் செய்த தவறினை திருத்திக் கொள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள். இத்தேர்தலை தொடர்ந்து இடம் பெறும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவினை எதிர்க்கொள்ளும்.

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை களமிறக்கியது சிறந்தது என்று பீல்ட் மார்ஷலி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் எதிரணியின் பக்கம் வரவுள்ளதாக அரசியல் களத்தில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நெருங்கிய நண்பனும் இல்லை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.