சிறிலங்கா அதிபருக்கு விளக்கம் கொடுக்க 5 நீதிபதிகளைக் கொண்ட குழாம்

மாகாணசபைத் தேர்தல்களை, முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடத்த முடியுமா என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ள விளக்கத்துக்கு பதிலளிப்பதற்காக, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான இந்தக் குழுவில், புவனேக அலுவிகார, சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலலகொட ஆகிய ஐந்து நீதியரசர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நீதிபதிகள் குழாம், எதிர்வரும் 23ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில், கூடி சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய – சட்டரீதியான விளக்கத்தை அளிப்பது குறித்து ஆராயவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதாயின் வரும் 21ஆம் நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு சட்டவாளர்கள் சங்கத்துக்கு உச்சநீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!