குடியுரிமை துறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயார் – நாமல்

தேவைப்பட்டால், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜூன் 30ஆம் நாள் வரை அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இதுகுறித்து ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

“கோத்தாபய தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். நான் அதை நம்பினேன்,

ஆனால், ஜூன் 30 ஆம் நாள் வரை குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் குழப்பமடைகிறேன். மேலும் தகவல் தேவை, ” என்று அதில் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ச,

“ பொதுஜன பெரமுன வேட்பாளரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்களில் பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் நாங்கள் அதை முன்வைப்போம்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!