லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வெளிநாடுகள் நுழைவிசைவு வழங்கக்கூடாது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இந்த நியமனத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் தனது மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

“ஒரு மோசமான போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமித்து, சிறிலங்கா அதிபர் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரது இந்த நியமனம் நல்லிணக்க செயல்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதை அடையாளப்படுத்துகிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு- அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வதற்குக் கூட, நுழைவிசைவுகளை மறுக்குமாறு சிறிலங்காவின் கூட்டாளி நாடுகளிடம் கோருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நாடு முழுவதும் அச்சத்தைத் தூண்டும், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் பெரும் இழப்பை சந்தித்த நூறாயிரக்கணக்கான தமிழர்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தும் என, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியை நசுக்குவதில் தனது பங்கிற்காக சவேந்திர சில்வா ஒருபோதும் பொறுப்புக்கூறவில்லை.

இதன்போது, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

அப்போது, கோத்தாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ், 1 ஆவது கஜபா ரெஜிமென்ட்டில், சவேந்திர சில்வா பணியாற்றியிருந்தார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!